‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது நமது முன்னோர்கள் வாக்கு. நோய் அற்ற வாழ்வு வாழ்கிறவர்கள்தான் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். இவர்களது வாழ்க்கை, செல்வமும், செழிப்பும் பெற்று விளங்குவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்நோயற்ற வாழ்வுக்கு முதன்மையாக நாம் செய்ய வேண்டியது ஒரு சில தொற்று நோய்கள் வராமல் தடுப்பது ஆகும். அவ்வாறு தடுக்கக்கூடிய தொற்று நோய்களில் டைபாய்டு, யானைக்கால் சுரம், காலரா, காசநோய், மலேரியா, காலா அசார் என்னும் கருப்புக் காய்ச்சல், வெறிநாய்க்கடி ஆகியவை முக்கியமானவை.
டைபாய்டு சுரம்
டைபாய்டு என்பது ஒரு தொற்று நோய், உணவு, மலம், குடிநீர், ஈக்கள் ஆகியவை மூலம் இவ்வியாதி மனிதனை எளிதில் தொற்றிக் கொள்கிறது. இந்த நோய் முற்றுவதற்கு 21 நாட்கள் ஆகும். நோயாளிக்குத் தலைவலியுடன் கூடிய காய்ச்சல் மாலையில் அதிகமாகிக் காலையில் குறைந்தது போல் தோன்றும். இக்காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும். 100 பாரன்ஹீட்டிலிருந்து 105 பாரன்ஹீட்வரை சுரம் ஏறி இறங்கும். இவ்வியாதி கல்லீரலையும், மண்ணீரலையும் தாக்குவதால் அங்கு வலியை ஏற்படுத்தும். வயிற்று உப்புசம், நினைவு தடுமாற்றம், அடிவயிற்றில் வலி, பேதி ஆகியவை உண்டாகலாம். வியாதி முற்றினால் குடலில் ஓட்டை விழலாம். இரத்தம், மலம், சிறுநீர் ஆகியவற்றை சோதனை செய்வதன் மூலம் இந்நோயைக் கண்டறியலாம். இந்நோய் ஒரு தொற்று நோய் என்பதால் நோய் கண்டவரைத் தனி அறையில் வைத்துக் கவனிக்க வேண்டும். இவர்கள் துணிமணிகளைக் கொதிநீரில் போட்டுச் சுத்தப்படுத்த வேண்டும். நோயாளியைக் கவனிப்பவர்களும் மற்றும் வீட்டில் உள்ளவர்களும் டிஏபி தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். நோயாளியின் படுக்கை அறையைப் பினாயில் போட்டுக் கழுவ வேண்டும். நோயாளிக்கு வேண்டாத துணிகளை எரித்துவிட வேண்டும். பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். இவ்வியாதிக்குள்ளானவர் அரைகுறையாக மருத்துவம் பெறாது, சுரம் நின்ற பிறகும் சில நாட்கள் மருத்துவர் ஆலோசனையுடன் மருந்து உட்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் திரும்பத் திரும்ப நோய் தாக்கி அவதிக்குள்ளாக நேரிடும்.
யானைக்கால் நோய்
மனிதனின் கவனக்குறைவு காரணமாக வரும் தொற்றுநோய்களில் மற்றொன்று யானைக்கால் நோய். இந்நோயைப் பரப்புவது கொசுவே. யானைக்கால் நோய் சுரம் கண்ட நோயாளியைக் கடித்துவிட்டு பிறகு மற்றொருவரை அதே கொசு கடிக்கும்போது பைலோரியோ என்ற கிருமிகள் உடலில் தொற்றி இந்நோயை உண்டாக்குறிது. இக்கிருமி நிணநீர்த் தாரைகளைத் தாக்கி நெறிக் கட்டிகளை ஏற்படுத்தும். நெறிக்கட்டிகளினால் நிணநீர் ஓட்டம் தடைபடுவதால் அதன் அருகிலுள்ள கால், விரைப்பை போன்ற உறுப்புக்கள் வீங்கும் சில சமயம் வீக்கம் சில நாட்களில் மறைந்துவிடும். தகுந்த மருத்துவம் செய்யாவிடில் நடுக்கத்துடன் கூடிய சுரம் திரும்பத் திரும்ப உடலைத் தாக்கும். மேலும் வீங்கிய உடல் உறுப்பு அப்படியே இருந்து பிறகு அதிகமாக வீங்கிவிடும். வீக்கம் உள்ள பாகங்கள் தடித்துத் தோல் சொரசொரப்பாகவும் கறுத்தும் பார்ப்பதற்கு யானைத் தோலைப் போல் காட்சியளிக்கும். இந்த நோய் பெரும்பாலும் மனிதனின் காலையே தாக்குகிறது. ஆகவேதான் ‘யானைக்கால் சுரம்’ என்று இந்நோயை அழைக்கிறோம். நோயாளியிடமிருந்து பிறருக்கு நோய் பரவக் கொசுவே காரணமாதலால் முதலில் கொசுவை ஒழிக்க வேண்டும். சுற்றுப்புறங்களில் சாக்கடையிலும் தண்ணீர் தேங்கி இருந்தால் கொசு வளர வாய்ப்பு உண்டு. ஆகவே அவ்விடங்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும். இதன் மூல யானைக்கால் சுரம் வராமல் தடுக்கலாம். இந்த யானைக்கால் சுரத்திற்கு ‘டையீதல் கார்பமசின்’ என்ற மருந்தை மருத்துவர்கள் கொடுப்பார்கள்.
வெறி நாய்க்கடி
ட்டில் செல்லப்பிராணியாக நாயை வளர்க்கிறோம். இந்நாயுடன் வீட்டில் உள்ள அனைவரும் பழகுகிறார்கள். நாய்க்குத் தடுப்பு ஊசி போட்டிருந்தால் நாயுடன் பழகுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆனால் தடுப்பு ஊசி போடாத நாய் மனிதனைக் கடிக்கையில் உண்டாகும் நோயே ‘வெறி நாய்க்கடி’ என்று அழைக்கப்படுகிறது. இந்நோய் ஒரு வகை வைரஸ் கிருமியால் வருகிறது. இக்கிருமி உமிழ்நீர் சுரப்பிகளையும், நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அப்பொழுது நோய் கண்டவர் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார். சுரத்துடன் வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருக்கும். வேகமாகக் காற்று பட்டால்கூட உடல் சிலிர்த்து இந்நோய் கண்டவர் 2-3 நாட்களில் இறந்துவிடுவார்கள். ஆகவே நாய் கடித்தவுடன் தடுப்பு முறையை எந்தவிதத் தயக்கமும் இன்றிச் செய்து கொள்ள வேண்டும். நாய் கடித்துவிட்டால் அது கடித்த இடத்தை நன்றாகச் சோப்புப் போட்டுக் கழுவி கார்பாலிக் அமிலத்தை அதன் மேல் போட்டுத் தடவ வேண்டும்; அத்துடன் வாய்ப்பூட்டு நோய் வராமல் இருக்க ‘டெட்டனஸ் டாக்ஸாயிட்’ போட்டுக் கொள்ள வேண்டும். நாய்க்கடிக்கு ஆளானவர்கள் வெறிநாயாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் போட்டுக் கொள்ள வேண்டும். இப்பொழுது வெறிநாயோ, தெருநாயோ தடுப்பு ஊசி போடாத வீட்டு நாயோ எந்த நாய் கடித்தாலும் ஊசி போட்டுக் கொள்வது அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது. தடுப்பு ஊசி அரசு மருத்துவமனையிலும் தனியார் நிறுவனங்களிலும் போடப்படுகிறது. கடித்த நாயை உடன் கொன்றுவிடாது தனியாகக் கட்டிப் போட்டு வெறி உள்ள நாய் தானா என்று அறிய வேண்டும். ஏனெனில் வெறி நாயைத் தெருக்களில் நடக்கவிட்டால் ஆபத்து அதிகமாகும். இக்காரணத்தாலேயே தெரு நாய்களை நகராட்சியினர் பிடித்துச் செல்கின்றனர். இந்நோய் கொண்ட நாய் இறந்துவிட்டால் புதைக்காது எரித்துவிட வேண்டும். ஏனெனில் இறந்த நாயைத் தின்னும் மற்ற பிராணிகளுக்கும் வெறி வரக்கூடும்.
காலரா
தடுக்கக்கூடிய தொற்று நோய்களில் அடுத்ததாக காலராவைப் பார்ப்போம். திருவிழாக்கள் போன்ற மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் சுத்தக் குறைவு காரணமாகவும் அசுத்தமான தண்ணீர் மற்றும் ஈ மொய்த்த உணவு ஆகியவற்றை உட்கொள்வதாலும் இந்த நோய் வெகு விரைவில் பரவிவிடுகிறது. வயிற்றுவலி, கழுநீரைப் போன்ற கட்டுக்கடங்காத வயிற்றுப் போக்கு, தடுக்க முடியாத வாந்தி, தாகம் ஆகியவையே காலராவின் முக்கிய அறிகுறிகளாகும். உடலில் உள்ள உப்புச்சத்தும், நீர்ச்சத்தும் நோய் முற்றிய ஒரு சில மணி நேரங்களுக்குள் வெகுவாகக் குறைந்துவிடும். ஆகவே உடம்பு சில்லிட்டுச் சக்தி குறைந்துவிடும். இரத்த அழுத்தமும் மிகக் குறைந்துவிடும். ஆகவே இதை ஒரு அவசர நோயாகக் கருதி இந்நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். இந்நோய் பரவி உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் தண்ணீரையும், பாலையும் கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். உணவுகளை ஈ மொய்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.கழிவறைகளைப் பிளிச்சிங் பவுடர், பினாயில் போட்டுக் கழுவ வேண்டும். காலராதடுப்பு ஊசியைப் போட்டு ‘டெட்ராசைக்கிளின்’ மாத்திரை களை உட்கொள்ளுவதன் மூலம் இந்நோயை வருமுன் தடுக்கலாம்.
தொடரும்...
தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்
எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1